வடக்கிருந்து உயிர் துறக்கும் ஜெயின் சமூகத்தினர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு

வடக்கிருந்து உயிர் துறக்கும் ஜெயின் சமூகத்தினர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு

jainபண்டைய இந்திய கலாச்சாரத்தில் வடக்கிருந்து உயிர் துறத்தல் என்ற வழிமுறை உண்டு. இது தற்போதுள்ள சாகும்வரை உண்ணாவிரதம் போன்றது. வயதானவர்கள், முனிவர்கள், கடவுளை அடைய நினைப்பவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தங்கள் உயிரை துறப்பதுதான் வடக்கிருந்து உயிர் துறத்தல் என்பது. இந்த நடைமுறை தற்போது ஜெயின் மதத்தினர்களிடம் இருந்து வருகிறது. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த நடைமுறை அதிகம் காணப்படுகிறது.

ஜெயின் சமூகத்தினர்களின் இந்த மதச் சடங்கிற்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தடை விதித்தது. இந்த சடங்கு தற்கொலைக்கு தூண்டுவதற்கு சமம் என்றும் இது சட்டவிரோதம் என்றும் கூறி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 10-ம் தேதி தடை விதித்தது. இந்த தடைக்கு நாட்டில் உள்ள ஜெயின் மதத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் உள்ள ஜெயின் மதத்தினர் கண்டன பேரணி நடத்தினர்.

இந்நிலையில் பல்வேறு ஜெயின் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

ஆத்மாவை தூய்மைப்படுத்தும் சடங்குதான் சந்தாரா. ஒருவர் மோட்சம் அடைவதற்கு பின்பற்றும் சடங்கை தற்கொலையுடன் ஒப்பிட்டது தவறு. நம்பிக்கை தொடர்பான தனிப்பட்ட விஷயங்களை பின்பற்றுவதற்கு அனைவருக்கும் சட்டப்படி உரிமை உள்ளது. அதை யாரும் குலைக்க கூடாது. ஜைன மத தத்துவங்களை கவனத்தில் கொள்ளாமல், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

பின்னர் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு, ராஜஸ்தான் மாநில அரசு, மனுதாரர்கள் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply