மோடி பெயரில் ‘ஜல்லிக்கட்டு’. பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக இந்த வருடம் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு உள்பட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இவ்வருடம் ஜல்லிக்கட்டு நடக்க பிரதமர் மோடிதான் காரணம் என்றும் இவ்வருட ஜல்லிக்கட்டையும், பொங்கலையும் மோடி பெயரில் அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மாரத்தாண்டம் பகுதியில் நியாயவிலை கடையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், மோடி பொங்கலாக கொண்டாட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மோடியின் பெயரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் எனவும், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியபோது ‘தமிழகஅரசு வழங்கும் பொங்கல் பரிசு, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு கிடைக்க வில்லை என்று புகார்கள் வந்துள்ளன.
எனவே அரசு உடனடியாக அந்தப் பிரச்சனையில் தலையிட்டு வரும் 14-தேதிக்கு முன்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு கேட்டுக் கொண்டார்.