ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்களும், பலகோடி மதிப்புள்ள பொருட்களும் அழிந்துள்ளன. இந்நிலையில் வெள்ள நிவாரண நிதியாக ரூ.1,000 கோடி வழங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர மழை பெய்து வருகிறது. இதனால் ஜம்முவில் 30 கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாகபாதிக்கப்பட்டுள்ளன. 3000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள ஆறு, நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாநிலம் முழுவதும் ஏறக்குறைய 10,000 பேர் ஆங்காங்கே வெள்ளப்பகுதிகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தின் காரணமாக இதுவரை சுமார் 108 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் அபாயமும் உள்ளது.
இந்நிலையில், ஜம்முவில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதத்தை இன்று பார்வையிட்ட பின் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு நிவாரண நிதியாக ரூ.1,000 கோடி வழங்கப்படும். காஷ்மீருக்கு மேலும் உதவி தேவையெனில் உடனடியாக மத்திய அரசு வழங்கும்.
ஜம்முவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளச் சேதம் தேசிய அளவிலான பேரழிவு. இந்த மீட்பு நடவடிக்கையில் ராணுவம், விமானப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், தேசிய பேரிழப்பு நிவாரண அமைப்பும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. நிவாரண்ப் பணிகளை மத்திய அரசு முழுமூச்சுடன் செய்து வருகிறது” என்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் போர்வைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணியில் ஈடுபடுத்த குஜராத், மராட்டியத்தில் இருந்து படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.