நரேந்திர மோடியை விரட்டியடிக்கும் படலம் பீகாரில் இருந்து தொடங்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை அகில இந்திய அளவில் எதிர்க்க முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஓம்பிரகாஷ் சவுதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளம், சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆகிய 6 கட்சிகளும் ஒன்றாக இணைந்து ‘ஜனதா பரிவார்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளது.
இது குறித்து லாலு பிரசாத் யாதவ் நேற்று பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”ஜனதா பரிவார் கட்சிகளின் இணைப்பு ஏற்கனவே நடந்து விட்டது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அது பற்றிய முறையான அறிவிப்பை முலாயம்சிங் யாதவ் விரைவில் வெளியிடுவார். ஒன்றாக இணைந்துள்ள 6 கட்சிகளும் பொதுவான ஒரே கொடியை கொண்டிருப்பதோடு அனைவரும் ஒரே சின்னத்தில் தான் போட்டியிடுவோம். ஏனென்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடுவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.
மதச்சார்பற்ற கட்சியாக திகழும் ஜனதா பரிவாரில், மதவாத சக்திகளுக்கு எதிராக போராட மதச்சார்பற்ற கொள்கைகளைக் கொண்டுள்ள மற்ற கட்சிகளும் இணைய முன்வர வேண்டும். ஜனதா பரிவார் கட்சியின் தலைவர் யார் என்பது கட்சி தொடங்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பதை கண்டு பா.ஜ.க. பயப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலின்போது வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள 26 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை நாட்டுக்கு மீட்டு வந்து அதை ஒவ்வொரு இந்திய பிரஜையின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.1½ லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்வோம் என்று பா.ஜ.க. அறிவித்தது. ஆனால், இப்போது அதை அவர்கள் மறுக்கிறார்கள். அதனால், பா.ஜ.க. நாட்டை ஏமாற்றிவிட்டது. அது ஒரு மோசடிக் கட்சி, பொய்களை மட்டுமே அடிப்படையாக கொண்ட கட்சி.
ராஷ்டீரிய ஜனதாதள ஆதரவுடன் நடக்கும் ஐக்கிய ஜனதாதளத்தின் ஆட்சியை காட்டு ராஜ்ஜியம்–2 என்று கூற பா.ஜ.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை. அவர்கள் தான் இந்த நாட்டை மிகப்பெரிய காடாக மாற்றிவிட்டனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பதும், இந்த ஆண்டின் இறுதியில் பீகார் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருப்பதும், நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து உள்ளது. மோடியை விரட்டியடிப்பது பீகாரில் இருந்துதான் தொடங்கும்” என்றார்.