தொடர் பூகம்பத்தால் ஜப்பான் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி. இயல்பு வாழ்க்கையும் பாதிப்பு
ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பயங்கர அடி விழுந்துள்ளதை அடுத்து அந்நாட்டு பங்குச்சந்தை 3 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு இயல்பு வாழ்க்கையும் பாதிப்பு அடைந்துள்ளது.
ஜப்பானின் தென் மேற்கு தீவான கையுஷுவில் கடந்த வியாழக்கிழமை 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதே பகுதியில் மீண்டும் கடந்த சனிக்கிழமை 7.3 அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டு நிலநடுக்கங்களால் இதுவரை 42 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடு வாசல்கள், உடமைகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
தொடர் நிலநடுக்கங்ள் காரணமாக அந்தப் பகுதிகளில் இயங்கி வந்த டொயட்டோ, சோனி, ஹோண்டா நிறுவனங்களின் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஜப்பான் பங்குச்சந்தை நேற்று 3.4 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
பெரும்பாலான பாலங்கள், சாலைகள் மோசமாக சேதமடைந்து காணப்படுவதால் சாலை மார்க்கமாக உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் உணவுப்பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். கூட்டம் அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருந்து பொருட்களை வாங்குகின்றனர்.
இந்த இயற்கை இடரால் ஏற்பட்டுள்ள நிலைமை சீரடைய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அப்படியே இந்த செய்தியையும் படிச்சிருங்க…