ஒரு பக்கம் ரஷ்யா-துருக்கி பதட்டம், மறுபக்கம் சீனா-ஜப்பான் பதட்டம். 3வது உலகப்போர் வருமா?
ஒருபக்கம் ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழித்தியதால் ரஷ்யா-துருக்கி இடையே போர் மூளும் அபாயம் இருந்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் தென்சீன கடலில் உள்ள தீவுப்பிரச்சனைக்காக சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவி வருகிறது.
தென்சீன கடலில் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே உள்ள டபாயூ என்ற தீவுக்கூட்டம் ஜப்பானுக்கு சொந்தம் என்று கூறப்படும் நிலையில் இந்த தீவை கடந்த சில ஆண்டுகளாக சீனா ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி போர்ப்பதட்டம் ஏற்படும் நிலையில் தற்போது ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர் கப்பல்களை தென்சீன கடல்பகுதிக்கு அனுப்பி உள்ளது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவுப்பகுதியில் ஜப்பான் தனது ராணுவத்தை நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. 500 ராணுவ வீரர்கள் கொண்ட படை இங்கு அனுப்பப்பட உள்ளதாகவும், ஏவுகணை உள்பட நவின போர் கருவிகளும் அங்கு கொண்டு செல்லப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து ஜப்பான் துணை ராணுவ மந்திரி கென்ஜி வகாமியா அந்த தீவு கூட்டத்தின் மேயர் யாஸ்கித்காவை சந்தித்து ஆலோசனை நடத்தியதில் ராணுவத்தை எந்தெந்த பகுதிகளில் நிறுத்துவது என்பது குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது. இந்த பிரச்சினையால் ஜப்பான் – சீனா இடையே மேலும் பதட்டம் அதிகரித்து உள்ளது.