கரிசலாங்கண்ணி கீரைக்கு கையாந்தகரை, கரிசாலை, கையான், பிருங்கராஜம் என, நான்கு விதமான பெயர்கள் உள்ளன. வெள்ளை, மஞ்சள், நீலம், சிவப்பு என, நான்கு நிறங்களில் இருக்கும். நீலம், சிவப்புக் கீரைகள் நம் ஊரில் கிடைப்பது அரிது. மஞ்சள் கரிசாலை சில இடங்களிலும், வெள்ளை கரிசாலை பரவலாக, அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றன. இது, கசப்பான சுவைகொண்டது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் வலிமையையும் அதிகரிக்கச் செய்யும். உடலில் எங்கேனும் வீக்கம் இருந்தால், வற்றிப்போவதற்கும் உடலைப் பொன் நிறமாக வைத்திருக்கவும் கரிசலாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கரிசாலை இலைச்சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் தலா 5.6 லிட்டர் எடுத்து, அதனுடன் ஒன்னே முக்கால் லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். எட்டு கிராம் அளவுக்கு, அதிமதுரத்தைத் தனியாக அரைத்துவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், இந்த நான்கையும் கலந்து, அடுப்பில் ஏற்றி, கொதிக்கவைத்து, பதமாக வடிகட்டி, கண்ணாடி பாட்டிலில் ஊற்றிவைக்கவும். தினமும், தலைக்கு இந்த எண்ணெயைத் தடவி, இளஞ்சூடான நீரில் தலைக்குக் குளித்துவந்தால், கண், காது நோய்கள் நீங்கும்.
கரிசாலை இலைச்சாற்றுடன், சம அளவு விளக்கெண்ணெய் கலந்து, சிறிதளவு வெள்ளைப்பூண்டு சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்கவைத்து வடித்துக்கொள்ளவும். தினமும் காலை, மாலை இரு வேளையும் 15 – 30 மி.லி வரை உட்கொண்டு வந்தால், காய்ச்சலுடன்கூடிய கட்டி, வீக்கம், காமாலை குணமாகும்.
கரிசாலை இலைச்சாறு, நல்லெண்ணெய் தலா 700 மி.லி எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, இளம்சூட்டில் கொதிக்கவைத்து வடிகட்டவும். இந்த எண்ணெயை காலை, மதியம், இரவு மூன்று வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு உட்கொண்டு வர. நாள்பட்ட இருமல் நீங்கும்.
கரிசாலை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, சூரணமாகச் செய்து சாப்பிடலாம். இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகை மற்றும் காமாலை நோய்கள் நீங்கும்.
இரண்டு துளிகள் கரிசாலை இலைச்சாற்றுடன் எட்டு துளிகள் தேன் கலந்து, கைக்குழந்தைகளுக்குக் கொடுக்க, ஜலதோஷம் நீங்கும்.
சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறினால், கால் முதல் அரை ஆழாக்கு கரிசாலை இலைச்சாறு காலை, மாலை பருகிவந்தால் குணமாகும்.
கரிசாலை இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, தைலமாக பாட்டிலில் ஊற்றிவைக்கலாம். இந்த எண்ணெயைத் தினமும் தலையில் தேய்த்துவந்தால், தலைமுடி நன்றாகக் கருப்பாக வளரும்.