மத்திய அமைச்சர் ஜவடேகர் வருகை திடீர் ரத்து. தேமுதிக இழுபறியால் சிக்கல்
சமீபத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்த பாஜகவின் மேலிடத்தின் உத்தரவின்படி சென்னை வந்த மத்திய அமைச்சர் ஜவடேகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட ஒருசில அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. விஜயகாந்த் பாஜக கூட்டணியில் இணைய பிடிகொடுக்காததால், அதிருப்தி அடைந்த ஜவடேகர், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இன்று சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திமுகவுடன் ரகசிய பேரம் செய்து வரும் தேமுதிக, பேரத்தை அதிகரிக்கவே பாஜகவை பயன்படுத்துவதாக உளவுத்துறை மூலம் பாஜக மேலிடத்திற்கு தகவல் சென்றுள்ளதால் இன்றைய ஜவடேகர் வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பாமகவும் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்ற நிலையில் இருந்து இறங்கி வருவதாக தெரியவில்லை. எனவே அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை பாஜக துவங்கிவிட்டதாகவும் விரைவில் பாஜக மேலிடத்தலைவர் ஒருவர் சென்னைக்கு வருகை தந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.