தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை. ஜவடேகர் திடீர் அறிவிப்பு
கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி புரிந்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தியா முழுவதும் பெரும் செல்வாக்கு இருந்தபோதிலும் ஒருசில மாநிலங்களில் அந்த கட்சியால் சிறிய முன்னேற்றத்தை கூட காண முடியவில்லை. அந்த மாநிலங்களில் ஒன்று தமிழகம் என்பது சமீபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளால் தெரியவந்துள்ளது.
மற்ற மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி சேர மற்ற மாநில அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வரும் நிலையில் தமிழகத்தில் கிட்டத்தட்ட பாஜக தனித்துவிடப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. முழுக்க முழுக்க தேமுதிகவை நம்பியே இந்த தேர்தலில் களம் புகுந்துவிட மனப்பால் குடித்து கொண்டிருந்த பாஜகவுக்கு தேமுதிக ஆட்டம் காட்டி வருவதால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. குறைந்தபட்சம் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த கூட தேமுதிக விரும்பவில்லை
ஏற்கனவே முதல்முறையாக மத்திய அமைச்சர் ஜவடேகர் தமிழகம் வந்தபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிடிகொடுக்காமல் பேசியதால் அதிருப்தி அடைந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் சென்னை வந்தார். அப்போது தேமுதிக தரப்பில் இருந்து சந்திக்கக்கூட விரும்பவில்லை இந்நிலையில் நேற்று ‘தே.மு.தி.க.வுடன் இன்று எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து தே.மு.தி.க. தேர்தல் குழு நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேமுதிகவின் குழுவினர் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாகவும் அப்போது, ஜவடேகரும் உடன் இருப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்த செய்தியினை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் தேர்தலை சந்தித்தது. அதேபோல், இந்த ஆண்டும் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். மேலும் சில கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. தே.மு.தி.க.வுடன் இன்று எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. சந்திப்பு தொடர்பாக எவ்வித திட்டமிடலும் இல்லை. வதந்திகளுக்கு நான் பதில் அளிக்க முடியாது’ என்று கூறினார். இந்த தகவலை தே.மு.தி.க.வும் மறுத்துள்ளது.