கைகலப்பில் ஈடுபட்ட எம்.பிக்களை கண்டித்த ஜெயலலிதா-கருணாநிதி?
அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மற்றும் திமுக எம்.பி திருச்சி சிவா ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் கைகலப்பு செய்து கொண்ட விவகாரம் குறித்து இரு கட்சி தலைமையும் நேற்று சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.
நேற்று முன் தினம் டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா கன்னத்தில் அதிமுக பெண் எம்பி சசிகலா புஷ்பா அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதை அடுத்து அ.தி.மு.க – தி.மு.க. எம்.பி.க்கள் இருவரையும் நேற்று அவர்களது கட்சி தலைமை அழைத்து விசாரணை நடத்தியது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மதியம் 2.30 மணிக்கு சசிகலா புஷ்பா எம்.பி. சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடன் இருந்தார். மாலை 5.15 மணி வரை அங்கிருந்த சசிகலா புஷ்பா, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார். அப்போது, ஜெயலலிதா அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர், சசிகலா புஷ்பா அங்கிருந்து இறுகிய முகஹ்துடன் புறப்பட்டு சென்றார்.
அதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் திருச்சி சிவா எம்.பி. நேற்று மதியம் 1 மணிக்கு சந்தித்து பேசினார். அப்போது, டெல்லி விமான நிலையத்தில் நடந்த பிரச்சினையை முழுமையாக அவர் கருணாநிதியிடம் விளக்கினார். இந்த சந்திப்பின்போது கருணாநிதியும் திருச்சி சிவாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இரு எம்பிக்களையும் அவரவர கட்சி தலைமை விசாரணை செய்து கண்டித்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.