சோவை சந்தித்து உடல் நலம் விசாரித்த ஜெயலலிதா – ராமதாஸ்
மூச்சுதிணறல் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகரான சோ’வை கடந்த 7ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, சோவை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றார். இந்நிலையில் தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் அவரை மருத்துவமனையில் நலம் விசாரித்துள்ளனர்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சோ’வை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று மதியம் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று சோ’வை சந்தித்து நலம் விசாரித்தார். இதுகுறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் பத்திரிகையாளர் சோ இராமசாமி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார்.
சோ இராமசாமி அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவம் குறித்தும், உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் மருத்துவர் அய்யா கேட்டறிந்தார். சோ இராமசாமி அவர்கள் விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.