வெள்ள நிவாரணம் ரூ.10,000. பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் கனமழை பாதிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கவும், நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மழை வெள்ளம் காரணமாக, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக, பல பகுதிகளில் பொது மக்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். தெருக்களிலும், தரைத் தளத்திலும் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் மேல்தளத்தில் உள்ள மக்களும் மழையால் பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறு மழை வெள்ளத்தால் பாதித்த மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 5,000 ரூபாயும், ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் 10 கிலோ அரிசி ஆகியவற்றை சிறப்பு வெள்ள நிவாரணத் தொகுப்பாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேற்காணும் தொகையானது, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வேட்டி, சேலை மற்றும் அரிசி ஆகியவை சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.
அதாவது, வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்கள் குடிசை ஒன்றுக்கு 5,000 ரூபாய் மற்றும் சிறப்பு நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 10,000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை பெறுவர். நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக்கு உள்ளானோர் 5,000 ரூபாய் , 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை நிவாரணமாக பெறுவர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணிகளை உடனடியாக துவங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த கணக்கெடுப்புகள் முடிந்தவுடன் இவை இன்னும் ஒரு சில தினங்களில் வழங்கப்படும்.
குடிசைகளை இழந்து வாடும் மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டித் தர நான் உத்தரவிட்டுள்ளேன்.
கால்நடை இழந்தோருக்கு, கால்நடை இழப்பிற்கு 30,000 ரூபாய், ஆடு மற்றும் பன்றி இழப்பிற்கு 3,000 ரூபாய் மற்றும் கோழி இழப்பிற்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களை கணக்கெடுக்கும் பணியினையும் விரைந்து முடிக்க நான் ஆணையிட்டுள்ளேன்.
கணக்கெடுப்பின் அடிப்படை யில், 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமுற்ற நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500/- ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410/- ரூபாய்; நீண்டகால பயிர் களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000/- ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்கப்படும்.
மேற்காணும் இழப்பீட்டுத் தொகையானது சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த நிவாரணத் தொகையை விவசாயிகள் கடனுக்கு நேர் செய்யக்கூடாது எனவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.”
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.