அமைதி காத்து, தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”ஒரு தலைவனைப் பற்றி பேரறிஞர் அண்ணா கூறும் போது, ” ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்றார். பேரறிஞர் அண்ணா வழியில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் அவர்களுடைய வழியில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.
எனது வழக்கு தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் விவரம் எனக்கு தெரிவிக்கப்பட்டது.
என் மீதுள்ள பாசத்தின் காரணமாகவும், பற்றின் காரணமாகவும், அன்பின் காரணமாகவும், நீதிமன்றத் தீர்ப்பு குறித்தோ, தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறித்தோ, நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்தோ யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும்; நீதித் துறையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் எந்தச் செயலிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும்; யார் மீதும் எவ்விதக் குற்றச்சாட்டையும் சுமத்த வேண்டாம் என்றும்; யாரும் குறை கூற இடமளிக்காத வகையில் அமைதி காத்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கினை எப்பொழுதும் போல் செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் எனது அன்பார்ந்த தமிழக மக்களையும், எனது ஆதரவாளர்களையும், என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நீதிமன்றத்தில் நான் செய்துள்ள மேல்முறையீட்டில் எனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.