சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா சனிக்கிழமை உத்தரவிட்டார்.
இதனால் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் தகவலை ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்குரைஞர் பி.குமார் உறுதிப்படுத்தினார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு இன்று முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டாலும், விடுமுறை நீதிபதியின் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுவதைத் தவிர, நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்தும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது குறித்து ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது எம்.எல்.ஏ. பதவியை ஜெயலலிதா உடனடியாக இழந்துள்ளார். இந்தச் சிக்கலில் இருந்து ஜெயலலிதாவை விடுவிக்க, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கோரி மனு தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.