சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த பத்து நாட்களாக பெங்களூர் சிறையில் இருந்து வருகிறார். தசரா விடுமுறை காரணமாக அவருடைய ஜாமீன் மனு விசாரணை செய்யப்படாததை அடுத்து இன்று பெங்களூர் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது. பெங்களூர் ஐகோர்ட் நீதிபதி ஏ.வி.சந்திரசேகரன் இந்த ஜாமீன் மனுவை விசாரிக்கிறார்.
ஜெயலலிதா தரப்பில் ராம்ஜெத் மலானியும், அரசு தரப்பில் பவானிசிங்கும் ஆஜராகி வாதாடவுள்ளனர்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக காவல் பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பெங்களூர் நகரில் முகாமிட்டுள்ளதால் பெங்களூரு உயர்நீதிமன்ற வளாகம், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகம், ஒசூர் சாலை, தமிழர்கள் வாழும் இடங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எம்.என்.ரெட்டி தெரிவித்தார்.
மத்திய சிறை, பெங்களூரு உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.