தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் செப்.20ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீர்ப்பு தேதி செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூரு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தனக்கு விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றக் கோரி முதல்வர் ஜெயலலிதா, சார்பில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் “சொத்து குவிப்பு வழக்கில் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ளார். தற்போது வழக்கு நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஜெயலலிதா நேரில் வந்து வாக்குமூலம் அளித்தபோது உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பரப்பன அக்ரஹாராவுக்கு நீதிமன்றம் தற்காலிகமாக மாற்றப்பட்டது. அதேபோல் தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, பாதுகாப்பு கருதி பரப்பன அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் செப்டம்பர் 20ஆம் தேதிக்கு பதில் 27ஆம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.