சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று திடீரென திரும்ப பெறப்பட்டுள்ளது.
நேற்று காலை பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழகத்தில் உள்ள சிறைக்கு மாற்றக்கோரி கர்நாடகா ஐகோர்ட்டில் வக்கீல் சத்திய நாராயணன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருப்பதால், தமிகத்தில் இருந்து அதிமுகவினர் பலர் பெங்களூரு வந்து செல்கின்றனர். இதனால், பெங்களூரு காவல்துறையினருக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை கெடுக்கும் வகையில் சில அசாதாரண சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற உத்தரவிடவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி ஜெயலலிதா டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுத் தாக்கல் செய்தார். இதனால், ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வக்கீல் சத்திய நாராயணன் இன்று திடீரென திரும்ப பெற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்திருப்பதால் இந்த மனுவை திரும்ப பெறுவதாக சத்திய நாயராணன, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.