ஓபிஎஸ்-க்கு எங்கள் ஆதரவு. ஜெயலலிதாவுடன் படித்த வகுப்பு தோழிகள் முடிவு
ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு அவருக்கு பதிலாக இரண்டு முறை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து வருகிறது. ஏற்கனவே இன்று இரண்டு எம்பிக்கள், மாபா பாண்டியராஜன் என்ற அமைச்சர் என ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு வலுத்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் ஆதரவு முழு அளவில் அவருக்கு உள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வென்டில் அவருடன் படித்த ஸ்ரீமதி அய்யங்கார் என்பவர் கூறியபோது, ‘நான் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்து வந்தேன். 1980-ம் ஆண்டுகள் மத்தி வரை அவர் என்னுடன் நெருக்கமாக இருந்தார். அடிக்கடி போனில் பேசி கொள்வோம். ஆனால், பின்னர் அவருடைய வீட்டில் இருந்தவர்களால் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு எங்களுக்குள் இருந்த தொடர்பும் குறைந்தது.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை இப்படி சென்று விடும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. அவர் தனது அரசியல் வாரிசு யார் என்பதை முடிவு செய்து இருக்க வேண்டும். பன்னீர் செல்வம் போன்றவர்களை அவர் தனது மனதில் தேர்வு செய்து வைத்திருப்பார் என நினைக்கிறேன். சசிகலாவா? பன்னீர் செல்வமா? என்று பார்த்தால் நான் பன்னீர் செல்வத்துக்கு தான் ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல் அவருடன் படித்த இன்னொரு தோழியான சாந்தினி பங்கஜ் கூறியதாவது:-
நான் தற்போது பெங்களூரில் வசிக்கிறேன். டிராவல் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறேன். எனக்கு குழந்தைகள் பிறந்த போது, 3 தடவை ஜெயலலிதா என்னை ஆஸ்பத்திரியில் வந்து பார்த்தார். அவரது வீட்டுக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்று சாப்பிட்டு இருக்கிறோம்.
2005-ம் ஆண்டு கடைசியாக அவர் வீட்டுக்கு நான் சென்றேன். ஜெயலலிதாவின் பயண ஏற்பாடுகளை கூட எங்கள் நிறுவனம் மூலம் செய்ய ஏற்பாடு நடந்தது. ஆனால், சசிகலா அதை தடுத்து விட்டார்.
அதன் பிறகு எங்களுக்கு ஜெயலலிதாவுடன் உள்ள தொடர்பும் துண்டிக்கப்பட்டது. எனது மகன் திருமணத்துக்கு அழைப்பு கொடுப்பதற்காக ஜெயலலிதாவை சந்திக்க முயன்றோம். அப்போது பன்னீர் செல்வம் மூலம் தொடர்பு கொண்டோம்.
ஜெயலலிதா சந்திக்க அனுமதி கொடுத்து இருந்தார். ஆனால், சசிகலாவின் ஆட்கள் அதை தடுத்து நிறுத்தி விட்டார்கள். பன்னீர் செல்வம் ஒரு சிறப்பான மனிதர். அவர் ஜெயலலிதாவின் நம்பிக்கையான நபராக இருந்தார்.
ஜெயலலிதாவின் உண்மையான தோழிகளே ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அவருக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.