மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் செலுத்தப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் பாதையில் நமது விண்வெளி விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளனர்.
இது, நாட்டுக்கு மிகவும் பெருமை தேடித் தரும் விஷயமாகும். இது இந்தியாவுக்கும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும்.
இந்தச் சிறப்பான சாதனையைச் செய்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், அனைத்துத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசம் பெருமை அடையும் வகையிலான சாதனையை அவர்கள் செய்துள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய ஒருசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்த சிறப்புமிக்க சாதனை, இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரிடம் ஊக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும், அறிவியல் ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இந்தச் சாதனை ஊக்கமளிக்கும் என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
மேலும் இந்த சாதனையை ஏற்படுத்திய விஞ்ஞானிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மற்றும் ராமதாஸ், விஜயகாந்த், தா.பாண்டியன், மற்றும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.