அதிமுக பொதுச்செயலாளராக ஏழாவது முறையாக போட்டியின்றி முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படார். இதற்கான சான்றிதழை நேற்று கட்சியின் அமைப்புச் செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் முதல்வரிடம் முறைப்படி வழங்கினார்.
அதிமுக கட்சியின் சட்டவிதிகள்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் செயலாளர் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு கடந்த 19-ஆம் தேதி கட்சியின் அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்களால் வெளியிடப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் ஜெயலலிதாவைத் தவிர யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதுமட்டுமின்றி பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்து 2,467 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
பொதுச்செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை, கட்சியின் அமைப்புச் செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் நேற்று வெளியிட்டார்.