சென்னையின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த திங்கட்கிழமை முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட நிலையில் பொதுமக்களிடையே இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருந்த போதிலும், மற்ற நகரங்களை விட மெட்ரோ கட்டணம் சென்னையில் மிக அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து கருணாநிதி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த கருத்துக்களுக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கி.மீ உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயிலின் பயணிகள் சேவையையும், கோயம்பேடு பணிமனை மற்றும் 7 மெட்ரோ ரயில் நிலையங்களையும் நான் 29.6.2015 அன்று துவக்கி வைத்தேன். கடந்த திமுக ஆட்சியின் போது, 2007 முதல் 2011 வரையிலான நான்காண்டுகளில் சென்னை மெட்ரோ ரயிலின் 3 சதவீதப் பணிகளே முடிவுற்று இருந்த நிலையில், கடந்த நான்காண்டுகளில் எனது தலைமையிலான அரசு 73 சதவீதப் பணிகளை முடித்தது. இதன் காரணமாகத் தான் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சென்னை மெட்ரோ ரயிலின் முதற் கட்ட பயணிகள் சேவையை துவக்க முடிந்தது.
இது போலவே, அடுத்த கட்டமாக விமான நிலையம் முதல் சின்னமலை மற்றும் ஆலந்தூர் முதல் புனித தோமையர் மலை வரையிலான சேவை அடுத்த ஆண்டு மார்ச்சு மாதமும்; கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான சேவை அடுத்த ஆண்டு ஜுன் மாதமும்; மீதமுள்ள ஏனைய வழித்தடங்கள் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் துவக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசால் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டதன் காரணமாக, சென்னை மாநகரத்தில் மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை சென்னை நகர மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
எனவே தான், மெட்ரோ ரயில் சேவையை விரைந்து வழங்கியமைக்கு எனக்கும், எனது அரசுக்கும், சென்னை நகர மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாத தி.மு.க தலைவர் கருணாநிதியும், தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் இந்த சென்னை மெட்ரோ ரயில் திட்டமே முந்தைய தி.மு.க அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் என்றும், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு கால தாமதம் ஏற்படுத்தியது என்றும் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தெரிவித்த பதிவுகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. கருணாநிதி, 30.6.2015 அன்று வெளியிட்டு உள்ள அறிக்கையிலும், இந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டது என்றும், கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மக்களை குழப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் தவறான தகவல்களை தொடர்ந்து தி.மு.க தலைவர் கருணாநிதி, தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கருணாநிதி தனது அறிக்கையில் ”மரியாதைக்காக கூட மத்திய அரசின் அமைச்சர்கள் யாரையும் இந்த தொடக்க விழாவிற்கு அழைத்ததாகத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார். இது போன்ற ஒரு கருத்தை தெரிவித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி, இது தொடர்பாக பதில் அளித்துள்ளார். அதில், மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடு இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டார் என்பதையும், அவர் வெளிநாடு செல்வதால் பங்கேற்க இயலவில்லை என்பதையும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். டெல்லி மெட்ரோ ரயில் கட்டணத்தை விட, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் 250 சதவீத அளவு அதிகம் என்றும், தமிழக அரசும் மெட்ரோ நிறுவனமும் இணையது, மக்களின் செலவிடும் சக்தியை அறிந்து, மெட்ரோ ரயில் கட்டணங்களை குறைத்து அறிவித்திட வேண்டும் என்றும் உபதேசம் வழங்கியுள்ளார் கருணாநிதி.
சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிப்பது தமிழக அரசு அல்ல. இதனை நிர்ணயிப்பது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தான். முதன் முறை அந்த நிறுவனம் தான் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும்; முதல் முறைக்கு பின்னர் கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம், சட்டப்படியாக ஏற்பாடு செய்யப்படும் ஒரு அமைப்பிடம் இருக்க வேண்டும் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட ஒப்புதல் அளித்தவரே கருணாநிதி தான். சென்னை மெட்ரோ ரயில் கட்டண விகிதம், மும்பை மெட்ரோ ரயில் கட்டண விகிதத்தைப் போன்றே அமைந்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனமும் தனது கட்டணத்தை விரைவில் உயர்த்த உத்தேசித்துள்ளது என்பதையும் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வாறு உயர்த்தப்பட உள்ள அந்த கட்டணமும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டணத்தை ஒட்டியே இருக்கும். செலவுகளுக்கு ஏற்ப கட்டணம் மாற்றி அமைக்கப்படுவதை ஒரு தன்னிச்சையான அமைப்பு நிர்ணயம் செய்திட வேண்டும் என்பதோடு; அந்த அமைப்பே மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற ஷரத்து அடங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கிய கருணாநிதிக்கு, மெட்ரோ ரயில் கட்டணங்களை பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை.
அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், வெற்று விளம்பரத்திற்காகவும் 1.7.2015 அன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஸ்டாலின், அந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த செய்தியும், காட்சியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். இது போன்று அநாகரிகமாக நடந்துகொள்வது சட்டமன்ற உறுப்பினருக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது இடங்களில் எல்லோருக்கும் சம அளவு உரிமை உள்ளது என்பதையும், யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்பதையும் உணர்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் உரிய அக்கறை செலுத்தாமல், நான்காண்டுகளில் 3 சதவீதப் பணிகளே முடித்த முந்தைய திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், அப்போதைய துணை முதலமைச்சர் ஸ்டாலினும், தற்போது முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து பயணிகள் சேவை துவக்கப்பட்டுள்ள இந்த புகழுக்கு, எந்த விதத்திலும் சொந்தம் கொண்டாட முடியாது, அரசியல் ஆதாயமும் தேட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.