சொத்துக்குவிப்பு வழக்கு. உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா பதில் மனு தாக்கல்
பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா தாக்கல் செய்த பதில் மனுவில், ” சொத்து குவிப்பு வழக்கில் சட்டரீதியான எந்தக் கேள்வியும் எழவில்லை. நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து நான் உள்பட 4 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவை அடுத்து ஜெயலலிதா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மற்ற மூவரின் பதில் மனுக்களும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
மேலும் இன்றைய விசாரணையில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளபட்டது. க.அன்பழகனின் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..