டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேளதாள வரவேற்பு. இன்னும் சில நிமிடங்களில் பிரதமருடன் சந்திப்பு
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுள்ள ஜெயலலிதா பாரத பிரதமர் மோடியை சந்திக்க இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். தற்போது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வு எடுத்து வரும் முதல்வர் சரியாக 4.30 மணிக்கு பிரதமரை சந்திக்கவுள்ளார்.
முன்னதாக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ஜெயலலிதாவை அ.தி.மு.க. எம்.பி.க்கள் 50 பேரும் சிறப்பான முறையில் பூங்கொத்துகளை அளித்து வரவேற்றனர்.
இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் சுமார் 50 நிமிடங்கள் பேசுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சின்போது தமிழக திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்துவார்.
பிரதமரை சந்திக்கும் போது அவரிடம் 32 பக்க கோரிக்கை மனுவை கொடுக்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். அந்த தொகுப்பு மனுவில் மொத்தம் 36 விதமான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்கள், எதிர்கால திட்டங்கள், உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பணிகள், நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் விவகாரம், இலங்கை தமிழர் பிரச்சனை, கச்சத்தீவை மீட்கும் கொள்கை முடிவு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, காவிரி நதியின் குறுக்கே மேகதட்டுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சிக்கும் விவகாரம், நதிநீர் இணைப்பு, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து விலக்கு கேட்பது உள்பட பல்வேறு அம்சங்கள் அந்த மனுவில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளுடனான சந்திப்பு முடிந்த பிறகு டெல்லியில் இருந்து இன்றிரவு 7 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனி விமானத்தில் புறப்படுகிறார். இரவு 9.30 மணியளவில் அவர் சென்னை வந்து சேருவார்.