பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், தனது தரப்பு இறுதிவாதத்தை இன்றுடன் முடித்துக்கொண்டார்.
ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் இறுதி வாதத்தை கடந்த 24 நாட்களாக வாதாடி வந்த நிலையில், இன்றுடன் தனது தரப்பு வாதத்தை முடித்துக்கொள்வதாக ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதனால் பெங்களூர் சிறப்புநீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா முன்னிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தனது வாதத்தை இன்று முடித்தார். ஜெயலலிதா மீது கூறப்பட்ட ரூ.66 கோடி சொத்து சேர்க்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரை மறுத்து அவர் இதுவரை 80மணிநேரம் வாதாடியுள்ளார்.
வழக்கறிஞர் குமார் தனது வாதத்தில், “விசாரணை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது வரை அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்றள்ளது. புலன் விசாரணை அதிகாரி தன்னிச்சையாக செயல்படாமல், அன்றைய ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசின் வழிகாட்டுதலின்படி நடந்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. அதனால், இந்த வழக்கில் இருந்து எனது மனுதாரர்கள் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.