காவிரி பிரச்சனை குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய அவசர கடிதம்

காவிரி பிரச்சனை குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய அவசர கடிதம்

18-jayalalitha-modi8-600-jpgசமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகம் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி கர்நாடக அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஜெயலலிதா எழுதியுள்ளதாவது:

”அணை பாதுகாப்பு வரைவு சட்ட மசோதா–2016 குறித்து மாநில அரசுகள் தங்களது கருத்தை தெரிவிக்கும் விதமாக மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. அந்த சட்ட வரைவு மசோதாவில் தாங்கள் தலையிட வேண்டும் என்று இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த சட்ட மசோதாவை ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் கடந்த 2010–ம் ஆண்டு அறிமுகம் செய்தது என்பதை நினைவுகூர வேண்டும். அந்த வரைவு மசோதாவில் குறிப்பிட்ட சில உட்பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய பிரதமருக்கு 29–7–2011 மற்றும் 17–3–2012 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதினேன். அந்த சட்ட மசோதா காலாவதியாகி விட்டது. தற்போது மத்திய அரசு மீண்டும் அந்த சட்ட மசோதாவை கொண்டு வருகிறது. ஆனால், நான் ஏற்கனவே தெரிவித்து ஆட்சேபனை கருத்துக்களை பரிசீலிக்காமல், தற்போதைய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது ஆகும்.

அணைகள் போன்ற தேசிய சொத்துகளை பாதுகாப்பது என்பது மிக முக்கியமானது என்பதை நான் அறிவேன். அந்த அணைகளை மாநில அரசுகள் முறையாக பராமரித்து, நிர்வகித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் அணைகள் பாதுகாப்பை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக ஏதாவது சட்டம் கொண்டு வரும்போது, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் செயல்படும் உரிமைகளை காலால் மிதித்து நசுக்கவோ, ரத்து செய்யவோ கூடாது. மாநில அரசின் உரிமைகள் குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. புதிய சட்டம் கொண்டு வரும்போது, அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறை செய்துள்ள சட்டசபை நிர்வாக எல்லையை அதிகாரத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் 2010–ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் முன்னுரை மற்றும் பிரிவு 1, 2 ஆகியவற்றில், ‘சட்டசபையின் நிர்வாகம் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது’. அதன்படி, எந்த மாநில அரசு, அரசியலமைப்பு சட்டம் 252(1)–ன் படி, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததோ, அந்த மாநிலத்துக்கு மட்டுமே பொருந்தும் என்று தெளிவாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போதையை சட்ட வரையறை மசோதாவில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஒரு மாநிலத்தின் எல்லைக்குள் ஓடும் நதியில் அணைகள் கட்டுவது அம்மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டு உள்ளது. அதன்படி அந்த அணைகளை பயன்படுத்தும் மற்றும் பராமரிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு உண்டு. ஆனால் அப்படிப்பட்ட அணைகளை தேசிய அணைகள் பாதுகாப்பு அமைப்பு ஆய்வு செய்வது என்பது அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிராக உள்ளது. எனவே இந்த புதிய சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருப்பதுபோல், தேசிய–மாநில அளவில் ஒரு அமைப்பை உருவாக்குவது எந்த ஒரு பயனும் அளிக்காது என்று நான் கருதுகிறேன். எனவே புதிதாக உருவாக்கப்படும் இந்த அமைப்பினால், ஒரு அணையின் மீது மாநில அரசு கொண்டுள்ள பொறுப்பும், கட்டுப்பாடும் சிதைக்கக்கூடாது என்பதை உறுதி செய்யவேண்டும்.

ஒரு மாநிலத்துக்கு சொந்தமான ஒரு அணை, அண்டை மாநிலத்தில் இருக்கும்போது, அதை பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது ஆகியவை தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட நீண்டகால ஒப்பந்தங்கள் குறித்தும் இந்த புதிய மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அண்டை மாநிலத்தில் உள்ள தமிழகத்துக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கக்கடவு, பெருவாரி பள்ளம் ஆகிய அணைகள் பராமரிக்கவும், பயன்படுத்தவும் இருமாநில அரசுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த ஒப்பந்த உரிமையை ரத்து செய்யும் விதமாக புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்தால், அந்த அணைகளை நம்பியுள்ள தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்று 2 மாநிலங்களுக்கிடையே உள்ள ஒப்பந்த அடிப்படையில் உரிமைகளை அங்கீகரிக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமான விதிகளை புதிய மசோதாவில் உருவாக்கியிருக்க வேண்டும்.

எனவே அணை பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரிவு 10, 12, 13, 23 ஆகியவற்றில் இந்த விதிகளை கண்டிப்பாக சேர்க்கவேண்டும். அப்படி இல்லையென்றால் அது நடுநிலையாக இருக்காது. இந்த புதிய சட்ட மசோதாவின்படி, எந்த மாநிலத்தில் அணை உள்ளதோ, அம்மாநிலத்தின் அணை பாதுகாப்பு குழுவினர், அணைப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வுகளை நடத்தி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூறுவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது ஆகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கும் மற்றும் நிர்வகிக்கும் உரிமை தமிழகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த புதிய சட்ட மசோதா ஒரு மாநிலத்தில் உள்ள அணைகளை மாநில அணை பாதுகாப்பு குழு பராமரிக்க முடியும் என்று கூறியுள்ளது. இந்த விதியை மாற்றி அமைக்க வேண்டும்.

மலைப்பகுதிகள் மற்றும் விலங்கு சரணாலயங்கள் உள்ளடங்கிய வனப்பகுதிகளில், பல அணைகள் அமைந்து உள்ளன. இந்த அணைகளை பராமரிப்பதற்காக இந்த பகுதியில் அதிகாரிகள் எளிதில் சென்றுவர உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எனவே இதுகுறித்தும் புதிய சட்ட மசோதாவில் குறிப்பிட வேண்டும். இதுதொடர்பாக முன்னாள் பிரதமருக்கு ஏற்கனவே என் கருத்துகளை நான் கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். ஆனால் இந்த கருத்துகள் தற்போதைய புதிய மசோதாவில் இடம்பெறவில்லை. இந்த புதிய அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள சட்ட மசோதா முழுவதையும் எனது அரசு முழுமையாக ஆய்வு செய்தது. அதிலுள்ள குறைபாடுகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளேன். எனவே இந்த புதிய சட்ட மசோதாவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தங்களை கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசின் இந்த கோரிக்கைகளை ஆலோசிக்காமல் அவசரமாக இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று மீண்டும் தங்களிடம் நான் வலியுறுத்தி கொள்கிறேன்”

இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply