பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா கொடுத்த மனுவின் முழு விபரம்.

5இந்திய பிரதமராக நரேந்திர மோடி கடந்த 26ஆம் தேதி பதவியேற்றவுடன் பல மாநில முதல்வர்களும் அவரை சந்தித்து தங்கள் மாநிலத்திற்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரை சந்தித்து 64 பக்க மனு ஒன்றை கொடுத்தார். 50 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு ஆக்கபூர்வமானது என்றும், பிரதமரின் சந்திப்பு தனக்கு திருப்தி அளித்ததாகவும் முதல்வர் கூறியுள்ளார். முன்னதாக முதல்வர் நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர்களையும் சந்தித்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் அளித்த 64 பக்க மனுவில் உள்ள முழு விபரங்கள் வருமாறு:

காவிரி மேலாண்மை வாரியமும், காவேரி நதிநீர் ஒழுங்கு முறை குழுவும் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு முல்லை பெரியாறு கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம்தான், அணையில் 142 அடி உயரத்துக்கு நீர் சேமிக்க எங்களுக்கு வசதி ஏற்படும்.

நெய்யாறு பாசன திட்டத்தில் கடந்த 2004-ம் ஆண்டு மார்ச்சில் இருந்து நீர் தருவதை கேரளா அரசு திடீரென்று நிறுத்திக்கொண்டது. தொடர்ந்து தமிழகத்துக்கு நீர் வழங்கும்படி கேரள அரசுக்கு அறிவுரை அளிக்க வேண்டும்.

அனைத்து மாநில நதிகளும் தேசிய மயமாக்கப்பட வேண்டும்.

மாநிலத்துக்குள் பாயும் நதிகளையும் இணைக்க வேண்டும். தமிழகத்தில் அத்திக்கடவு, அவிநாசி வெள்ள வடிகால் திட்டத்தை ஆயிரத்து 862 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு, முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்க வேண்டும்.

ரூ.500 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ள பெண்ணாறு, பாலாறு, நெடுங்கல் அணைக்கட்டு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். கடந்த மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்ட 5 ஆயிரத்து 166 கோடி மதிப்புள்ள காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும். ரூ.11 கோடியே 421 கோடி மதிப்பிலான காவிரி நவீனமயமாக்கும் திட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும். இனப்படுகொலைக்கு இலங்கை அரசுதான் காரணம் என்று குற்றம்சாட்ட வேண்டும்.

இலங்கையில் தனி ஈழம் அமைவதற்காக, இலங்கை தமிழர்கள் மற்றும் உலகமெங்கும் பரவியிருக்கும் இலங்கை தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு வழிசெய்யும் அம்சமும், இந்திய அரசு கொண்டு வரும் தீர்மானத்தில் இடம்பெற வேண்டும்.

பாக் நீரினை பகுதியில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்க நீங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தங்களை திரும்பப்பெற்று, அதை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இதற்காக மூக்கையூர், ராமேசுவரம் எண்ணூர் மீன்பிடி துறைமுகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.420 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். மீன்பிடி துறைமுகங்களை தூர்வாருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்.

டீசலுக்கான மத்திய கலால் வரியை திரும்பப்பெறுவதற்காக, மீன்பிடிக்காக எந்திர படகுகள் வைத்திருப்போர் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்றும், ஒரு படகு அதிகபட்சமாக 500 லிட்டர் ஐஸ்பீட் டீசலை பயன்படுத்த வேண்டும் என்றும் தகுதி நிர்ணயம் செய்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மத்திய மின்சார உற்பத்தி நிலையங்களில் இருந்து 15 சதவீத ஒப்பளிக்கப்படாத மின்சாரத்தை முழுமையாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

கர்நாடகா ரெய்ச்சூரில் இருந்து மராட்டிய மாநிலம் சோலாபூர் வரை 765 கிலோ வோல்ட் திறனுள்ள மின்கடத்தி லைன் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் தெற்கு பகுதியில் உள்ள மின் தொகுப்பில் மின்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

மின் கட்டமைப்பு கழகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள உள்மண்டல மின்பகிர்மான லைன்கள் அமைக்கும் பணியை துரிதமாக முடிக்க உத்தரவிட வேண்டும்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள மின் நிலையங்களில் இருந்து தமிழகத்தில் புகழூர் மின் நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு வரும் நடவடிக்கையை மின் கட்டமைப்பு கழகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் காற்றாலை மூலம் 7 ஆயிரத்து 252 மெகாவாட் மின்சாரத்தை மட்டும் பெறுவதற்கான வசதிதான் உள்ளது. அதன் மூலம் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வசதியும் போதிய அளவில் இல்லை. இதற்கு தற்போது அதிக அளவில் செலவாகிறது.

எனவே பசுமை மின் வழித்தடங்களை அமைப்பதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். இதற்காக ரூ.2 ஆயிரத்து 250 கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்காக 2011-12 முதல் 2014-15-ம் ஆண்டுக்காக, ரூ.1,888 கோடியை அனுமதிக்க வேண்டும் என்று 13-வது நிதிக் கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால் 2013-14 வரை ரூ.125 கோடி மட்டுமே வந்துள்ளது.

தமிழகத்தில் வெள்ளத்தடுப்பு பாதுகாப்புக்காக 2012-13-ம் ஆண்டுவரை 5 பணிகளுக்காக ரூ.625.77 கோடி செலவழிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு மொத்தம் ரூ.59.82 கோடி மட்டுமே அளித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட ரூ.388 கோடியை அளிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.

சர்வ சிக்ஷா அபியான் என்ற கல்வி திட்டத்துக்காக தமிழகத்துக்கு ரூ.438.38 கோடி தொகையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்கியது. ஆனால் அதில் 65 சதவீதமான மத்திய அரசின் பங்களிப்பு ரூ.284.95 கோடியில், ரூ.57 கோடியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது. இன்னும் ரூ.228 கோடி பாக்கியுள்ளது.

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2013-14-ம் ஆண்டில் தனியார் பள்ளிகளில் 49 ஆயிரத்து 864 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய தொகையான ரூ.25.13 கோடியை விரைவாக தமிழகத்துக்கு தர வேண்டும்.

பொதுவிநியோக திட்டம், உரம், மண்ணெண்ணெய், எல்.பி.ஜி. எரிவாயு ஆகியவற்றுக்கான மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக மத்திய அரசு அளிப்பதை வன்மையாக எதிர்க்கிறோம். மேம்பாட்டு பணியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதற்கு ஏற்ற வகையில் மாநில அரசு மூலம் அந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

மத்திய அரசு வழங்கும் ஓய்வூதிய தொகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை உச்சவரம்பை நீக்க வேண்டும். புகையிலை மற்றும் புகையிலை மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது வசூலிக்கப்பட வேண்டிய வரியை, மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசுகளும் வசூலிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

நஷ்டஈடுகள் வழங்கியதை குறித்த கோரிக்கைகளை தவறாமல் மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பித்து வருகிறது. ஆனால் உறுதி செய்யப்பட்ட நஷ்டஈட்டின் முழு தொகையை பெற முடியவில்லை.

2007 முதல் 2012-ம் ஆண்டு வரை, தமிழக அரசு கோரிய 9 ஆயிரத்து 676.46 கோடி ரூபாய்க்கு பதிலாக மத்திய அரசால் ரூ.2,636.5 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள ரூ.7,039.96 கோடியை வழங்க வேண்டும்.

தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்துக்காக தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிகவும் குறைவாக உள்ளது. இதை 2014-15-ம் ஆண்டுக்காக குறைந்தபட்ச அளவாக ரூ.1,200 கோடியாக உயர்த்தி அளிக்க வேண்டும்.

அனைத்து வகை உரங்களும் சரியான நேரத்தில் மாநில அரசுக்கு கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு வைத்த சில முக்கியமான அம்சங்கள், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மக்களுக்கு பணப்பகிர்வு, உணவு கூப்பன் வழங்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவுகளை திருத்த வேண்டும்.

பணத்தை வழங்கும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அது மாநில அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

வெளிச்சந்தையில் விற்கும் சர்க்கரையின் விலைக்கும், பொதுவிநியோக திட்டத்தில் வழங்கப்படும் சர்க்கரையின் விலைக்கும் உள்ள வித்தியாசம் முழுவதையும் 2014-15-ம் ஆண்டுக்குள் மானியமாக மத்திய அரசு ஏற்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

தமிழகத்துக்கு தேவையான 65 ஆயிரத்து 140 கிலோலிட்டர் மண்எண்ணெயை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

போலீஸ் படையை மேலும் நவீனப்படுத்துவதற்காக தமிழகத்துக்கு அடுத்த சில ஆண்டுகளுக்குள் ரூ.10 ஆயிரம் கோடி தேவைப்படும். 500 போலீஸ் நிலையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குகின்றன. சில பழைய போலீஸ் நிலைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

போலீசாருக்கு 100 சதவீத வீட்டு வசதிகளை வழங்க கூடுதலாக 60 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்கள், நகர்ப்புற வாகன ரோந்து வசதிகள் போன்றவை நவீனப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து நகரத்திலும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வந்துள்ளது. 3 மாநகராட்சிகள், 117 நகராட்சிகள், 516 நகர பஞ்சாயத்துகளிலும் ரூ.20,820 கோடி செலவில் திட்டம் தயாராக உள்ளது. இதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.

தமிழகத்தில் நகர்புறங்களில் 14 லட்சத்து 63 ஆயிரம் குடும்பங்கள் குடிசைப்பகுதியில் வசிக்கின்றனர். வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 3.65 லட்சம் தொகுப்பு வீடுகளைக் கட்ட ரூ.29 ஆயிரத்து 200 கோடி தேவைப்படுகிறது. இதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்காக ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழக அரசு செலவு செய்கிறது. இதற்கான திட்டங்களுக்கான செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சென்னை மெட்ரோ ரெயில் முதல்பாக திட்டத்தில், திருவொற்றியூர் மற்றும் விம்கோநகர் வரையான விரிவாக்க பணிகளுக்காக ரூ.3,253 கோடி தொகைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

மெட்ரோ ரெயிலின் 76 கி.மீ. நீளம் கொண்ட இரண்டாம் பாக பணிகளை நிறைவேற்ற ரூ.36 ஆயிரத்து 100 கோடி தேவைப்படும் நிலையில், இதற்கு மத்திய அரசின் முழு உதவி நாடப்படுகிறது.

ரெயில்வே துறையால் அமல்படுத்தப்பட்ட சென்னை எம்.ஆர்.டி.எஸ். திட்டத்தை சென்னை மெட்ரோ ரெயிலுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இன்னும் ரெயில்வே வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது.

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023 திட்டத்தை நிறைவேற்ற 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 400 கோடி மதிப்புள்ள 10 முக்கிய ரெயில்வே திட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த திட்டங்களுக்கு விரைவாக ரெயில்வே துறை அனுமதி அளிக்க வேண்டும்.

மருத்துவம் மற்றும் பல்மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேருவதற்காக, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்துவதற்காக, மருத்துவ கவுன்சில் மற்றும் பல்மருத்துவ கவுன்சில் பிறப்பித்த அறிவிப்பாணையை, தமிழக அரசின் எதிர்ப்பை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

இந்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று முந்தைய மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை பிரதமர் மறுபரிசீலனை செய்து, மறுசீராய்வு மனுவை திரும்பப்பெற்று, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்ற வேண்டும்.

சிறப்பு நர்சிங் உள்பட பல்வேறு மருத்துவ கல்வி நிலையங்களை தோற்றுவிப்பதற்காக மத்திய அரசு அவற்றுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு “டிஜிட்டல் அட்ரசபிள் சிஸ்டம்” என்ற ஒளிபரப்பு முறைக்கு தேவையான உரிமத்தை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

தமிழ் மொழியை சென்னை ஐகோர்ட்டில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்து, அதை செயல்படிவத்தில் கொண்டு வர வேண்டும்.

பொறியியல் படிப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் சேருவதற்கு வசதியாக, அவர்களின் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை 35 சதவீதமாக மாற்றும்படி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரின் பாஸ்போர்ட், பக்ரைனில் அவர்கள் வேலைபார்த்த நிறுவனத்தின் வசத்தில் உள்ளது. இதனால் அவர்கள் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே இவர்கள் அரசின் செலவில் பக்ரைனில் இருந்து சொந்த ஊர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் செல்வதற்கு வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,.

 

Leave a Reply