பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட இயலாது என தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்த ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகரின் அறிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தண்டனை பெற்ற ஜெயலலிதா, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தகுதியிழப்புச் செய்யப்பட்டிருக்கிறார். எனவே, அவர், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட இயலாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.