ஜெயலலிதா மீதான வருமான வரித்துறை வழக்கு. அக்.1 ல் நேரில் ஆஜராக உத்தரவு

jayaகடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது வருமான வரித்துறை சார்பில் தொடர்ந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, மற்றும் அவரது தோழி சசிகலா ஆகிய இருவரும், அக்டோபர் 1ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருமான வரித்துறை வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை, சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில், சமரச மனு நிலுவையில் இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அதன் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டார்.
ஆனால், வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமி, சமரச மனுவை காரணம் காட்டி வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக்கூடாது என வாதாடினார்.

இதுபோன்ற வழக்குகளில் வேறு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பு ஏதேனும் இருந்தால் அதை தாக்கல் செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயலலிதா, சசிகலா ஆகியோர், வரும் அக்டோபர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் அன்று இந்த வழக்கின் அடுத்த கட்ட வாதம் நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

Leave a Reply