தென்மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் 30 நாட்களில் அனுமதி. முதல்வர் அதிரடி அறிவிப்பு

தென்மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் 30 நாட்களில் அனுமதி. முதல்வர் அதிரடி அறிவிப்பு
gim
சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று காலை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘தென் மாவட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு சலுகைகள் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், தொழில் தொடங்குவதற்கான அனுமதி 30 நாட்களுக்குள் தரப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக தென் மாவட்டங்களில் அதிகளவிலான தொழிற்சாலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

சென்னையில் இன்று தொடங்கிய  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

“மாநாட்டிற்கு வருகை தந்துள்ள முதலீட்டாளர்கள், அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்களை வரவேற்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க சென்னை, முதன்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. 15 நாடுகளில் இருந்து ஆயிரம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதுமிருந்து 4 ஆயிரம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

மற்ற மாநிலங்களை விட சேவைத்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தை அனைத்து துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதே நோக்கம். தமிழ்நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட ஒன்றரை மடங்கு அதிகம். 2023ல் தமிழக மக்களின் தனிநபர் வருமானம் முன்னேறிய நாட்டு மக்களுக்கு இணையாக வரும். வளர்ச்சியில் தேசிய சராசரியில் தமிழகம் ஒன்றரை மடங்கு கூடுதலாக உள்ளது. உலக உற்பத்தித்துறையில் தேசிய மையமாக தமிழகம் விளங்குகிறது. 2012ல் சூரிய மின்னுற்பத்திக் கொள்கை வெளியிடப்பட்டது. நாட்டிலேயே அதிக சூரிய மின்னுற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

2011ல் ஆட்சிப் பொறுப்பேற்ற போது மின்பற்றாக்குறை உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்து வலுவான அடிப்படைகளை தமிழகம் கொண்டுள்ளது. சிறு, குறு தொழில்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. நாட்டில் தொழில் அமைதி நிலவும் மாநிலங்களில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அசோசெம் ஆய்வில் தமிழகம் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்துடன் இணைந்து முன்னேற வெளிநாட்டு தொழில் அதிபர்கள் முன்வர வேண்டும். ஒரு லட்சம் கோடியை தாண்டி முதலீடுகள் வந்துள்ளன. தென் மாவட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு சலுகைகள் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கான அனுமதி 30 நாட்களுக்குள் தரப்படும்”

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

Leave a Reply