‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்’ திட்டம்: ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்!
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1000 மதிப்புடைய ‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்’ வழங்கும் திட்டத்தினை, முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: “திருத்தி அமைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மாதவிடாய் சுகாதாரத் திட்டம், சீரமைக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், நகரும் மருத்துவமனைத் திட்டம் என்ற வரிசையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய “அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்” (Amma Baby Care Kit) வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, நடப்பாண்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 67 கோடி ரூபாய் செலவில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 குழந்தைகளின் தாய்மார்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா 7.9.2015 அன்று தலைமைச் செயலகத்தில் பெட்டகத்தை வழங்கி வாழ்த்தினார்.
இந்த அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தில் குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா’ சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் ஆகிய 16 வகையான பொருட்கள் உள்ளடக்கி உள்ளன. இப்பெட்டகத்தின் மதிப்பு 1000 ரூபாய் ஆகும்”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.