தடைகளைத் தகர்த்து, புதிய சாதனைகளை படைப்போம். ஜெயலலிதாவின் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

jayalalithaமுன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாருமான ஜெயலலிதா நாளை தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட இருக்கும் தமிழக மக்களுக்கு வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:

சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடை மொழியாகும்“ என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கருத்திற்கிணங்க, தொன்மையிலும், பன்முகத்தன்மையிலும், ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாக உற்சாகமாய்க் கொண்டாடி வருகிறார்கள்.

தொன்றுதொட்டு இருந்து வந்த இந்த நடைமுறை மாற்றப்பட்டதைச் சரி செய்து, முன்னோர் வகுத்த வழிமுறையின்படி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாளாய் தொடரும் என்பதை மீண்டும் நிலைநாட்டியதை நினைவு கூர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக மக்களின் உள்ளத்திலும், எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்திடும் இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒருமித்து உழைத்து, தடைகளைத் தகர்த்து, புதிய சாதனைகளைப் படைத்து, வளமிக்க தமிழகத்தை உருவாக்கிட உறுதியேற்போம்.

இந்த புத்தாண்டு தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும், என்றும் குறையாத மகிழ்ச்சியையும், நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியையும் வழங்கும் ஆண்டாக விளங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது வாழ்த்து அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply