பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்க சோனிய காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் மறுத்துவிட்டதை அடுத்து காங்கிரஸின் பிற தலைவர்களும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிக்க மாநிலக்கட்சிகளின் கூட்டணி முயற்சி செய்கின்றன.
தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மாநில கட்சிகளான அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிக்க திட்டமிட்டுள்ளன.
எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. மேலும் அதன் தலைவருக்கு மத்திய மந்திரி அந்தஸ்து உள்பட பல சலுகைகளும் உண்டு. இந்த அந்தஸ்தை பெறுவதற்கு காங்கிரஸுக்கு தற்போது தகுதியில்லாமல் போய்விட்டது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்க குறைந்தது 55 தொகுதிகள் வேண்டும். ஆனால் காங்கிரஸுக்கு வெறும் 44 தொகுகள் மட்டுமே உள்ளதால், அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிக்க திட்டமிட்டுள்ளன.
அதிமுகவுக்கு 37 எம்.பிக்கள், திரிணாமுல் காங்கிரஸுக்கு 34 எம்.பிக்கள் மற்றும் பிஜு ஜனதா தளத்திற்கு 20 எம்.பிக்கள் உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பதவி அதிமுகவிற்கும், எதிர்கட்சி துணைத்தலைவர் பதவி பிஜு ஜனதா தளத்திற்கும், துணை சபாநாயகர் பதவியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்ள ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை அதிமுக பெற்றால், இந்திய அளவில் அதிமுக செயல்பட அது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அகில இந்திய அளவில் கட்சியை வளர்த்து, வரும் 2019ஆம் ஆண்டில் பிரதமர் பதவியை குறி வைக்கலாம் என்றும் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.