தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலை குறித்த உண்மையான விவரங்களை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பல்வேறு கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சைக்காக எந்நேரமும் அமெரிக்க செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக பாஜகவின் முக்கிய தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இரண்டு கால்களின் மூட்டுகளும் தீராத வலியை அவருக்கு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அலோபதி, சித்தா ஆகிய இரண்டு மருத்துவ முறைகளின்படியும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். அதற்கான சில பயிற்சிகளையும் மேற்கொள்கிறார், ஆனாலும் அவரால் நடக்கவும், நிற்கவும் சிரமப்படுவதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்த பிரச்னைகள் காரணமாகவே அவர் தனது கொடநாடு பயணத்தையும் கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. தனது உடல் பிரச்சனைகளுக்காக ஜெயலலிதா, விரைவில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் செய்திகள் உலா வந்தபோதும், இதுகுறித்து அ.தி.மு.க. தரப்பிலோ, அரசு தரப்பிலோ, அதிகாரிகள் தரப்பிலோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ”தமிழக முதல்வர் ஜெயலலிதா எந்த நேரத்திலும் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று அங்கு பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளார்” என்று கூறி உள்ளார். சுப்பிரமணியன்சாமியின் இந்த டுவிட் காரணமாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.