3வது முறையாக ஜெயலலிதா விரைவில் பதவியிழப்பார். ராமதாஸ் ஆரூடம்

ramdossஏற்கனவே இரண்டு முறை முதல்வர் பதவியை இழந்துள்ள ஜெயலலிதா கூடிய விரைவில் மூன்றாவது முறையாக பதவியிழப்பார் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆரூடம் இன்று கூறியுள்ளார்.
 
பாட்டாளி மக்கள் கட்சியின் மண்டல மாநாடு இம்மாதம் 12ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டு பணிகளை பார்வையிட இன்று கோவை வந்த டாக்டர்.ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புகார் மீது நடவடிக்கை எடுக்காததோடு, தேர்தல் நேர்மையாக நடந்தது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் இந்த வெற்றி 2016 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உண்மையில் 2016 தேர்தலில் அவருக்கு இது பின்னோட்டமாகத்தான் இருக்கும். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவி இழக்கப்போகிறார்.

இந்த இடைத்தேர்தலில். ஜெயலலிதாவின் வெற்றி ஜனநாயக வெற்றியல்ல ஜெயநாயக வெற்றி. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை வைத்து 2016 சட்ட மன்ற தேர்தலை நடத்த முடியாது. இவரை உடனடியாக மாற்ற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் மாவட்டங்களில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் தொழில் முனைவோரை கவர்ந்து, அவர்கள் தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் தொழில் கூடங்கள் மூடப்பட்டதன் காரணமாகவே மின்தேவையானது குறைந்து இருக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம், பா.ம.க. வலியுறுத்தலையேற்று தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தையும், பி.ஆர்.டி. எனப்படும் அதிவேக பேருந்து போக்குவரத்தையும் கொண்டு வர வேண்டும்.  தமிழகத்தில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்கு கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிக்கலாம்”

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்

Leave a Reply