கச்சத்தீவு விவகாரத்தில் நேற்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதில் இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை இல்லை என்றும், ஓய்வு எடுக்கவும், வலைகளை காயப்போடவும் மட்டுமே உர்மை உள்ளதாகவும் மனுதாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, வைகோ உள்பட தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்றுஎழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம்:
கச்சத்தீவு தொடர்பாக, சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மீனவர் பாதுகாப்பு அமைப்பானது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கடல் எல்லை விவகாரம் முடிந்து போன ஒன்று எனத் தெரிவித்துள்ளது.
மேலும், கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு எந்த பாரம்பரிய உரிமையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, இதே பிரச்னை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது இதே கருத்தை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வழக்குரைஞர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசின் பதில் மனு குறித்த செய்திகள் பத்திரிகைகளில் புதன்கிழமை வெளியாகியுள்ளன. அதைப் படித்த போது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இந்த பதில் என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டதாகும். இந்த விவகாரம் தங்களின் தனிப்பட்ட பார்வைக்கு கொண்டு வரப்பட்டு இருக்காது என்று கருதுகிறேன்.
நினைவுபடுத்த விரும்புகிறேன்: கடந்த ஜூன் 3-ஆம் தேதி தங்களைச் சந்தித்து தமிழகத்தின் பிரச்னைகள் தொடர்பாக கோரிக்கை மனுவில், கச்சத்தீவை மீட்பதன் அவசியத்தைக் குறிப்பிட்டிருந்தேன். கச்சத்தீவு என்பது இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்ற நிலைப்பாட்டை எனது அரசு எப்போதும் கொண்டிருக்கிறது.
இந்த சிறிய தீவானது, 285 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பாக் நீரிணையில் அமைந்துள்ள இந்தத் தீவு, ராமநாதபுரம் மாவட்டத்தின் பகுதியாக விளங்கி வருகிறது. இந்தத் தீவின் உரிமையாளராக ராமநாதபுரம் ராஜா விளங்கியதற்கு போதுமான சான்று ஆவணங்கள் ஏற்கெனவே உள்ளன. எனவே, பாக் நீரிணை, கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாரம்பரியமிக்க மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை உள்ளது.
கடந்த 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதற்கான ஒப்பந்தங்கள் மத்திய அரசால் செய்யப்பட்டன. அப்போது முதல், தமிழக மீனவர்கள் பாக் நீரிணை, கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்க முடியாமல் உள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு: இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கும் கச்சத்தீவை மீட்க வேண்டும் எனக் கோரி, தமிழக சட்டப் பேரவையில் கடந்த 1991-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக என்னால் தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டில், இந்த வழக்கில் தமிழக அரசின் வருவாய்த் துறையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கும் இடத்தை மற்றொரு நாட்டுக்கு வழங்க வேண்டுமெனில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்பட்ட பிறகே அளிக்க வேண்டும் என்று கடந்த 1960-ஆம் ஆண்டில் பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தத்தையும் மேற்கொள்ளாமல் ஒப்பந்தம் மூலமே கச்சத்தீவு அளிக்கப்பட்டதால், அது செல்லாதது. சட்ட விரோதமானது.
எனவே, கச்சத்தீவை இலங்கையிடம் அளிப்பதற்கு காரணமாக அமைந்த 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டைய ஒப்பந்தங்களை ரத்து செய்வதற்கு தீவிரமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
கச்சத்தீவு விவகாரத்தை ஒரு முடிந்த போன விஷயமாகக் கருதக் கூடாது என தங்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன். இந்தச் சூழ்நிலையில், தங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். கடந்த 1974-ஆம் ஆண்டில் இலங்கைக்கு கச்சத்தீவை அப்போதைய காங்கிரஸ் அரசு தாரைவார்த்த போது அதனை எதிர்த்து வழக்குத் தொடருவேன் என்று கருத்துத் தெரிவித்தார், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.
மறுபதில் மனு: கச்சத்தீவு வழக்கு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மனு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே, இந்தப் பிரச்னையை மீண்டும் ஆய்வு செய்து தமிழக மக்களின் அக்கறையை பிரதிபலிக்கும் வகையில் மறுபதில் மனுவை எந்தத் தாமதமும் இன்றி தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.