சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கிடைத்ததும் சிறையில் இருந்த வெளியே வந்த ஜெயலலிதாவை வாழ்த்தி ரஜினிகாந்த் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதி தனது நன்றியை தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பெங்களூருவில் உள்ள சிறைச்சாலையில் இருந்து ஜாமீன் நேற்று கடந்த சனிக்கிழமை சென்னை திரும்பினார்.
ஜெயலலிதா மீண்டும் தமிழகம் திரும்பியதற்கு வாழ்த்து தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில், “நீங்கள் மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு நல்ல நேரம் அமைவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். எப்போதும் உங்களுக்கு ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் அமைதி கிடைப்பதற்கு வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி வாழ்த்துகள்” என்று கூறியிருந்தார்.
ரஜினிகாந்த்த் எழுதிய கடிதம் பெற்ற ஜெயலலிதா நேற்று அவருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “19.10.2014 தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டேன். நீங்கள் காட்டியிருந்த அன்புக்கும், கருணை பொதிந்த உணர்வுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வம் மட்டுமல்லாது தங்களது முயற்சிகளுக்கும் வெற்றி அளிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கவும்” என கூறியுள்ளார்.
இதேபோல், வாழ்த்து தெரிவித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்திக்கும் ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.