தமிழக விவசாயிகளின் நலன் காக்க கெயில் திட்டத்திற்கு மாற்று யோசனை. பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களின் விவசாயம் நிலம் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள் பதிக்கவுள்ளதை எதிர்த்து தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கில் கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் தமிழக விவசாயிகளின் போராட்டம் வலுவாகியுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து ஒருசில முக்கிய குறிப்புகளுடன் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கூட்டநாடு, மங்களூரு வழியாக பெங்களூருவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக தமிழகத்தின் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் நடவடிக்கையில் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
திட்டமிட்டபடி கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதித்தால் 7 மாவட்டங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். அவர்களது வாழ்வாதாரமான விளைநிலங்கள் கையைவிட்டுப் போகுமென்பதால் விவசாயிகள் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க ஆந்திராவில் கெயில் பைப்லைன் விபத்தையும் நினைவுகூர விரும்புகிறேன். இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கவும், விளைநிலங்களை காப்பாற்றவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஓரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.
இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு காண வேண்டும். இவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Chennai Today News: Jayalalithaa asks Narendra Modi to ‘rescind’ notification on GAIL gas pipeline