மழையால் சேதமடைந்த பகுதிகளை ஜெயலலிதா, ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிடுகிறார்

CM_Jaya1-350x250

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிடுகிறார்.

திருவள்ளூர் மாவட்டம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் 2–ந் தேதி சராசரியாக 24 செ.மீ. மழை பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ., பொன்னேரியில் 31 செ.மீ., பூந்தமல்லியில் 33 செ.மீ., செங்குன்றத்தில் 32 செ.மீ., என்ற அளவில் மழை பெய்துள்ளது. அம்பத்தூர், பொன்னேரி, மதுரவாயல், திருவொற்றியூர் மற்றும் மாதவரம் பகுதிகளில் பல இடங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் 15 இடங்களில் சாலைப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு சிறிய ஏரிகளில் உடைப்பும், மூன்று பொதுப்பணித் துறை ஏரிகளில் உடைப்பும் ஏற்பட்டது. அவை சரி செய்யப்பட்டு வருகின்றன. 530 நபர்கள் நேற்று இரவில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 35 வீரர்கள் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும், மூன்று கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படை குழுக்களும், திருவள்ளூரில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2–ந் தேதி சராசரியாக 34 செ.மீ., மழை பெய்துள்ளது. குறிப்பாக தாம்பரத்தில் 49 செ.மீ., திருக்கழுக்குன்றத்தில் 44 செ.மீ., செங்கல்பட்டில் 39 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில் 37 செ.மீ., செய்யூரில் 37 செ.மீ., மகாபலிபுரத்தில் 33 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

நந்திவரம் –கூடுவாஞ்சேரி பேரூராட்சி, வரதராஜபுரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், ஜி.எஸ்.டி. சாலை, பீர்க்கங்கரணை, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, ஆதனூர், படப்பை, பாக்குவான்சேரி, தண்டரை மற்றும் புதுக்குப்பம் ஆகிய பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

206 நிவாரண முகாம்களில் 43ஆயிரத்து697 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84ஆயிரத்து519 மக்களுக்கு உணவு பொட்டலங்களும், அம்மா குடிநீர் பாட்டில்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள், 650 காவல் துறையினரும், ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோரப்பட்டு ஏரி, கலவாக்கம் ஏரி, செங்கல்பட்டு வட்டத்தில் தென் மேல்பாக்கம் ஏரி மற்றும் குறும்பூர் ஏரி ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வண்டலூர்–கேளம்பாக்கம் சாலை, தாம்பரம் செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, தாம்பரம்–படப்பை–காஞ்சீபுரம் சாலை மற்றும் ஓரகடம்–சிங்கப்பெருமாள் கோயில் சாலை ஆகியவற்றில் ஏரிகளில் இருந்து உபரி நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டம்

சென்னையில், 2–ந் தேதி 28 செ.மீ., மழை பெய்துள்ளது. அடையாறில் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்த 3 ஆயிரத்து 646 நபர்கள் ஏற்கெனவே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 80 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, அதில் 10 ஆயிரத்து 845 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 400 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை வீரர்களுடன் கூடுதலாக, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 175 மருத்துவ முகாம்கள் மற்றும் 13 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக 20 ஆயிரத்து 92 நபர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள 423 பகுதிகளில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

மின்சார வினியோகம்

436 பகுதிகளில் வெள்ள நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மோட்டார் பம்புகள், ஜே.சி.பி./பொக்லைன், அதிவேக நீர் உறிஞ்சும் எந்திரங்கள் ஆகியவற்றுடன், 49 தீயணைப்பு வாகனங்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால், பெரும்பாக்கம், ராதாநகர், மெப்ஸ், சிறுசேரி, சோழிங்கநல்லூர், நங்கநல்லூர், தில்லை கங்கா நகர், ஆவடி, மதுரவாயல், செங்குன்றம், வியாசர்பாடி, அம்பத்தூர் ஆகிய இடங்களிலும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் குழுக்கள்

காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை புறநகர் பகுதிகளில் மின்னூட்டிகளும், டிரான்ஸ்பார்மர்களும் பாதுகாப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெள்ள நீர் பாதுகாப்பான அளவிற்கு குறைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும். சென்னை நகரில் அனைத்து துணை மின் நிலையங்களும் பயன்பாட்டில் உள்ளன.

அடையார், கோட்டூர்புரம் பகுதிகளில் உள்ள 3 கழிவு நீரேற்று நிலையங்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. ராணுவத்தில் 200 வீரர்கள் கொண்ட இரண்டு குழுக்கள் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். பெங்களூருவிலிருந்து கூடுதலாக 4 குழுக்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதில், ஒரு குழு திருவள்ளூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாடு காவல் படையின் 8 பட்டாலியன்களை சேர்ந்த வீரர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை வீரர்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இம்மாவட்டத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ஜக்மோகன் சிங் ராஜு, சத்யகோபால், ஹர்மந்தர் சிங், ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், கா.பாலச்சந்திரன், வீர சண்முக மணி ஆகியோரை கூடுதலாக தற்போது அனுப்பி வைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இதுவரை தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களைச் சார்ந்த 520 நபர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 15 குழுக்கள் மற்ற மாநிலங்களிலிருந்து அனுப்பி வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையின் 6 குழுவினரும், கடலோர பாதுகாப்பு படையினைச் சார்ந்த 3 குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோட்டார் பொருத்தப்பட்ட 126 படகுகள், 74 சாதாரண படகுகள் என மொத்தம் 200 படகுகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 50 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட தயார் நிலையில் உள்ளன.

இன்று காலையில்….

தேசிய கடலோரப் பாதுகாப்பு படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும், இந்திய விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களை 2–ந் தேதி பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். மோசமான வானிலை காரணமாக இந்திய வான்படைக்கு சொந்தமான விமானத்தின் விமானிகள், தற்போது மீண்டும் மழை பொழிவதால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஹெலிகாப்டர் பறக்க இயலாது என்று தெரிவித்தனர்.

எனவே, ஜெயலலிதா சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் 3–ந் தேதி (இன்று) காலையில் பார்வையிடுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply