நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் துயரத்தை நான் சுமக்கின்றேன். வாட்ஸ் அப்பில் ஜெயலலிதா
சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட துயரில் இருந்து இன்னும் பல பொதுமக்கள் வெளிவர முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ் அப் மூலம் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வெள்ள சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. உங்களுக்காக உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப்பெரும் துன்பத்தில் இருந்து உங்களை மீட்பேன். இது உறுதி.
உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென உறவினர் கிடையாது. எனக்கு சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான். எத்துயர் வரினும் அதை இக்கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்” என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுவரை அறிக்கை மூலம் மட்டுமே மக்களுக்கு செய்தியினை தெரிவித்து வந்த முதல்வர் தற்போது வாட்ஸ் அப் தொழில்நுட்பம் மூலம் ஆறுதல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.