சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு. ஜெயலலிதாவை சிறையில் சந்தித்த வழக்கறிஞர்கள்.

jayalalithaசொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து சுப்ரிம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை செய்ய வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், பரணிகுமார், செந்தில் உள்பட 5 பேர் நேற்று ஜெயலலிதாவை சிறையில் சந்தித்தனர்.

பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவரங்கள், கர்நாடக நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை ஜெயலலிதாவிடம் விரிவாக விளக்கி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா தங்கியுள்ள அறையில் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் சந்தித்த தகவலை கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. உறுதிப்படுத்தி உள்ளார்.

இதை தொடர்ந்து, ஜெயலலிதாவை சந்தித்த நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர். இன்று அல்லது நாளை அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது. ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அவருக்கு பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜர் ஆவார் என்று கூறப்படுகிறது. மேலும், வருகின்ற 18 ஆம் தேதியில் இருந்து 26 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்திற்கு தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால், ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை அவசரமாக தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply