தூக்கில் தொங்க தயார். காங்கிரஸில் இருந்து விலகிய ஜெயந்தி நடராஜன் ஆவேசம்

Natarajan quits Congressகடந்த மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் நேற்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, ‘நான் அமைச்சராக இருந்தபோது தவறு செய்ததாக யாராவது நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயாராக உள்ளேன்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜெயந்தி நடராஜன் ஆவேசமாக பேசியதாவது: இந்த தருணம் எனக்கு வலி மிகுந்த தருணம். காங்கிரஸ் கட்சியில் நான்காம் தலைமுறையாக எங்களது குடும்பம் பணியாற்றி வருகிறது. எனது குடும்பம் முழுவதும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையது. காங்கிரசுடன் இணைந்து செயல்படுவதை மறுபரிசீலனை செய்யும் தருணம் வந்துவிட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மேலிட அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. மேலிடம் அழைத்தாலும் மறுபரிசீனை செய்யும் எண்ணம் இல்லை. பலமுறை சோனியா காந்தி, ராகுலை சந்திக்க முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.

சுற்றுச்சூழல் தொடர்பாக ராஜீவ் காந்தியின் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. நான் களங்கம் இல்லாமல் எனது பணியை ஆற்றியுள்ளேன். சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்பதே எனது கொள்கையாக இருந்தது. எனக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கிறேன். சுற்றுச்சூழல் துறையில் சட்டத்திற்கு உட்பட்டே பணிகளை செய்தேன். ராகுல்காந்தி எனக்கு பலமுறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ராகுலிடம் இருந்து துறை சார்ந்த பல கட்டளைகள் எனக்கு வந்தன. ஃபிக்கி தலைவர்களை ராகுல் சந்தித்த பிறகுதான் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு அனுமதிக்கப்படும்.

வேதாந்தா, நியாம்கிரி திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த திட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் ராகுல் தலையிட்டு அந்த திட்டங்களுக்கு அனுமதி கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் எந்தவித தடையும் நான் தெரிவிக்கவில்லை. சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு வந்து விடக் கூடாது என கூறி வந்தேன். என்னை பற்றி ராகுல் காந்தி அலுவலகம் பல கட்டுக்கதைகளை கூறியது. இது தொடர்பாக சோனியாவுக்கு நான் எழுதிய கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. நான் தவறு செய்தேன் என நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயாராக உள்ளேன்.

அமைச்சராக இருந்தபோது சக அமைச்சர்கள் எனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. நரேந்திர மோடியை தாக்கி பேசுமாறு கூறினார்கள். என்னை பதவியில் இருந்து நீக்குமாறு சோனியா காந்தி கூறியதாக மன்மோகன் சிங் என்னிடம் தெரிவித்தார். மேலும், செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அஜய் மக்கான் என்னிடம் தெரிவித்தார். தேர்தலுக்கு 100 நாட்களுக்கு முன் என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது ஏன்? அமைச்சர் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டதற்கு இதுவரை பதில் இல்லை.

நான் இணைந்த போது இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை. தேசிய தலைமையுடன்தான் பிரச்னையே தவிர மாநில காங்கிரசுடன் எந்த பிரச்னையும் இல்லை.

வாசன் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் என்னை தொடர்பு கொண்டார். எந்த கட்சியிலும் சேர இப்போது எந்த அபிப்ராயமும் இல்லை. தற்போது ஓய்வு எடுக்க உள்ளேன். எனது கசப்பான அனுபவங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டேன்’

இவ்வாறு ஜெயந்தி நடராஜன் கூறினார்.

Leave a Reply