தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உடை கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்திருப்பதாக மருத்துவ கல்லூரி இயக்குனரகம் இன்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இன்று சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி இயக்குனரகம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் ”சமுதாயத்தில் டாக்டர்களுக்கு என ஒரு தனி மரியாதை இருக்கிறது. எனவே, மருத்துவ மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மருத்துவ கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குகிறது. இங்கு படிக்க வரும் மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டி-சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலை, சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளை மட்டுமே மாணவிகள் அணிந்து வரவேண்டும். அதேபோல் தலைமுடியை விரித்து போடாமல், இறுக்கமாகக் கட்டிக்கொண்டு வரவேண்டும். அதேபோன்று மாணவர்களும் பேன்ட் மற்றும் முழுக்கை சட்டை அணிந்து ‘இன்’ செய்து, ஷூ அணிந்து வரவேண்டும். ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து வருபவர்கள் வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவ-மாணவிகள் கண்ணியமாக தோற்றம் அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய உடை கட்டுப்பாட்டுக்கு மாணவர்களிடையே பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களை போல கல்லூரி மாணவ மாணவிகளை நடத்தக்கூடாது என்றும் உடை விஷயத்தில் இந்த கட்டுப்பாடு தேவையற்றது என்றும் மாணவர்கள் கருத்து கூறியுள்ளனர்.