முதல் படத்திலேயே கபடியை மையமாக வைத்து வெண்ணிலா கபடி குழு திரைபடத்தை எடுத்து மாபெரும் வெற்றி பெற்ற சுசீந்திரன், இந்த படத்தில் கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் உள்ளடி விளையாட்டுக்களை தைரியமாக பதிவு செய்துள்ளார்.
சிறு வயதிலேயே தாயை இழந்து தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் விஷ்ணு, கிரிக்கெட்டில் இருக்கும் தீவிர ஈடுபாடு காரணமாக படிப்பில் கோட்டை விடுகிறார். ஜீவாவின் அப்பாவிற்கு இது மனவருத்ததை தந்தாலும், பக்கத்து வீட்டு நபரின் அறிவுரையின்படி விஷ்ணுவுக்கு எதில் ஈடுபாடு அதிகம் இருக்கின்றதோ, அந்த திறமையை மேலும் வளர்க்க முடிவு செய்கிறார்.
இந்நிலையில் பக்கத்து வீட்டுக்கு குடிவரும் ஸ்ரீதிவ்யாவுக்கும் விஷ்ணுவுக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. இந்த காதலை தெரிந்து கொண்ட ஸ்ரீதிவ்யாவின் பெற்றோர் ஸ்ரீதிவ்யாவை வேறு ஊருக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் விஷ்ணு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்.
விஷ்ணுவின் குடிப்பழக்கத்தை மறக்கடிக்க அவரை கிரிக்கெட் கிளப்பில் சேர்த்துவிடுகிறார் தந்தை. அங்கு சூரியும் லட்சுமணனும் நண்பனாகிறார்கள். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என மலைபோல நம்பியிருந்த விஷ்ணுவும், லட்சுமணனும் தேர்வாளர்களால் புறக்கணிக்கப்படுகின்றனர். இதனாம் மனம் நொந்த லட்சுமணன் தற்கொலை செய்துகொள்கிறார். இது விஷ்ணுவை பயங்கரமாக பாதிக்கின்றது. இதனால் விஷ்ணு எடுக்கும் முடிவு என்ன, ஸ்ரீதிவ்யாவுடனான காதல் என்ன ஆயிற்று? என்பதுதான் கிளைமாக்ஸ்.
விஷ்ணு உண்மையான கிரிக்கெட் வீரர் என்பதால் அவருடைய நடிப்பு மிக இயல்பாக இருக்கின்றது. காதல் மற்றும் சோகக்காட்சிகளிலும் தேறி விடுகிறார். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு இளையதலைமுறை நாயகன் கிடைத்துவிட்டார்.
ஸ்ரீதிவ்யா கொள்ளை அழகு. அவர் படத்தில் இருந்தாலே போதும். நடிக்கவே வேண்டாம். ரசிகர்கள் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
லட்சுமணன் நிறைவான நடிப்பு., சூரியின் நகைச்சுவை நடிப்பு அபாரம். படத்திற்கு பெரிய பிளஸ் இமானின் இசை. பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கின்றது.
கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் தேர்வின்போது நடக்கும் தில்லுமுல்லுகளை தைரியமாக வெளிச்சம் போட்டி இயக்குனர் சுசீந்திரனுக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ஜீவா, ஜீவனுள்ள படம்.