ஹிலாரிக்கு ஆதரவாக இசை நிகழ்ச்சி நடத்திய உலகப்புகழ் பெற்ற பாடகி
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளனர். இந்நிலையில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக உலகப்புகழ் பெற்ற பாப் பாடகியான ஜெனிபர் லோபஸ் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இந்த இசை நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் ஹிலாரி கிளிண்டன் தரப்பு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் ஹிலாரி கிளிண்டனுக்கு இ-மெயில் சர்ச்சைகள் மீண்டும் கிளம்பியுள்ள நிலையில் நடிகை, பாடகி ஜெனிபர் லோபஸ்-இன் இசை நிகழ்ச்சி பெரும் ஆதரவை பெற்றுள்ளது மட்டுமின்றி இந்த இசை நிகழ்ச்சியின் போது மழை வந்த போதும் ரசிகர்கள் ஒரு இன்ச் கூட அசையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனிபர் லோபசின் இசை நிகழ்ச்சி மட்டுமின்றி அவருடைய முன்னாள் கணவர் மார்க் அந்தோணியின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரண்டு இசை நிகழ்ச்சிகளும் முடியும் தருவாயில் மேடைக்கு வந்த ஹிலாரி, மக்களிடம் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மேலும் டிரம்பை தோற்கடிப்பது மக்கள் கையில் தான் உள்ளது என்றும், எந்த மாதிரியான குற்றச்சாட்டை சுமத்தினாலும் பின்வாங்கப்போவதில்லை என்றும் ஹிலாரி கூறினார்.