தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு நகைக்கடைகள் திடீர் அடைப்பு
மத்திய அரசு சமீபத்தில் விதித்த கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக்கடை நிறுவனங்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளன. இதன்படி புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் தமிழகத்தில் நகைக்கடைகள் மூடப்பட்டிருக்கும். இதனால் கோடிக்கணக்கான மதிப்பில் தங்க நகை வியாபாரங்கள் பாதிக்கும் என கூறப்படுகிறது.
நேற்று முன் தினம் பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வெள்ளி தவிர மற்ற அனைத்து வகை ஆபரணங்களுக்கும் ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். ஏற்கனவே இரண்டரை லட்சத்திற்கும் மேல் நகைவாங்குபவர்கள் தங்கள் பான் கார்டு விபரங்களை ஒப்படைக்கவேண்டும் என்ற அறிவிப்பு காரணமாக தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு சதவீத கலால்வரி விதித்து தங்களுடைய வியாபாரத்தை மத்திய அரசு நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்த கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்க நகை நிறுவனங்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகளை அடைப்பதாக அறிவித்து உள்ளன. இந்த கடையடைப்பிற்கு பின்பும் மத்திய அரசு தங்களுடை எதிர்ப்புக்கு செவிசாய்க்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Chennai Today News: Jewellery stores are closed three days from today