அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை முற்றிலும் முடிவடைந்து தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மே 11-ம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, உள்பட நான்கு பேர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த விசாரணை கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் அரசு சார்பில் பவானி சிங் ஆஜரானது செல்லாது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஆச்சார்யா இந்த வழக்கின் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார். அவர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியிருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் மே 11-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.