சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கு நேரம் சரியில்லை போலும். சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே, வருண்காந்தி ஆகியோர்களை அடுத்து தற்போது புதிதாக சர்ச்சையில் சிக்கியுள்ள தலைவர் ஜம்மு காஷ்மீர் மாநில சுகாதார அமைச்சர் சவுத்ரி லால் சிங். இவர் சமீபத்தில் அரசு பெண் மருத்துவர் ஒருவரின் சட்டை காலரை சரி செய்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் உலா வரும் அந்த சர்ச்சைப் புகைப்படத்தில், ஜம்மு காஷ்மீர் மாநில சுகாதார அமைச்சர் சவுத்ரி லால் சிங், அரசு மருத்துவமனையின் பெண் மருத்துவரின் சட்டை காலரை சரிசெய்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
இது குறித்து சம்பவ இடத்தில் இருந்த மருத்துவமனையின் மூத்த அதிகாரி கூறும்போது, “மருத்துவமனையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் பெண் மருத்துவர் அணிந்திருந்த கோட்டின் காலர் சரியாக இல்லாததை சுட்டிக் காட்டினார். அதற்காகவே அவர் காலரில் கை வைத்தார். அதற்கு அந்த மருத்துவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அப்போது அருகில் இருந்த மற்றொரு பெண் மருத்துவர் தானாகவே அவரது சட்டை காலரை சரி செய்து கொண்டார்” என விவரித்தார்.