கெவென்டிஷ் நிறுவனத்தை கையகப்படுத்தியது ஜேகே டயர்ஸ்
ஜேகே டயர்ஸ் நிறுவனம் ரூ.2,195 கோடி மதிப்பில் கெவென்டிஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளது.
கெவென்டிஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கெசோராம் இண் டஸ்ட்ரியல் பிரிவை கையகப் படுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முடிந்துள்ளன. கெசோராம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டிரக் மற்றும் பஸ் போன்ற வாகனங்களுக்கான டயர்கள் பிரிவில் உள்நாட்டுச் சந்தையை வைத்துள்ளது.
இந்த கையகப்படுத்தல் மூலம் டிரக் மற்றும் பஸ்களுக்கான டயர்கள் பிரிவில் பலமான இடத்தை பிடிக்க முடியும் என்று ஜேகே டயர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரகுபதி சிங்கானியா குறிப்பிட்டுள்ளார். மேலும் நிறுவனம் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர் உற்பத்தியிலும் ஈடுபட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை ஜேகே டயர்ஸ் நிறுவனத்தின் முக்கியமான உத்தி என்றும், இதன் மூலம் சர்வதேச அளவில் முன்னணி டயர் நிறுவனமாகவும், அனைத்து பிரிவிலும் டயர்களை வழங்கும் நிறுவனமாகவும் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
கெவென்டிஷ் நிறுவனம் ஹரித்வாருக்கு அருகே உள்ள மூன்று ஆலைகள் மூலம் டயர்கள் மற்றும் டியூப்களை தயாரித்து வருகிறது. இந்த கையகப்படுத்துதல் மூலம் ஜேகே டயர் நிறுவனத்துக்கு வெளிநாட்டில் உள்ள 3 ஆலைகள் உட்பட மொத்த ஆலைகள் எண்ணிக்கை 12 ஆக இருக்கும். ஆண்டு உற்பத்தி திறன் 347 லட்சம் டயர்களாகவும் இருக்கும்.