திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள இரவுக் காவலாளி, ஊர்தி ஓட்டுநர், ஊர்தி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நடமாடும் சிகிச்சைப் பிரிவு ஊர்தி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்தியின் ஓட்டுநர் பணியிடம், ஊர்தி உதவியாளர் பணியிடம் ஆகியன தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடம் முற்றிலும் தாற்காலிகமானது. ஊர்தி ஓட்டுநர் பணியிடத்துக்கு, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, நான்கு சக்கர வாகன உரிமம் பெற்றுள்ள, 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.8 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
ஊர்தி உதவியாளர் பணியிடத்துக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத 18 முதல் 35 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடத்துக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
நிரந்தரப் பணியிடம்: இதேபோல, காலியாக உள்ள இரவுக் காவலர் நிரந்தரப் பணியிடத்துக்கு 8-ஆம் வகுப்பு தோல்வியடைந்த, தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 18 முதல் 32 வயதுக்குள்பட்டவராகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், முன்னுரிமை பெற்ற பிரிவு கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களைப் பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.