பெல்ஜியம் தாக்குதல் புலனாய்வுக்கு ஒத்துழைக்க தயார். அமெரிக்கா அறிவிப்பு
சமீபத்தில் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் தீவிரவாதிகளின் மனித வெடிகுண்டு தாக்குதல் காரணமாக 31 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் 2 பேர்களும், காயம் அடைந்தவர்களில் 10 பேர்காளும் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த அமெரிக்கர்களுக்கு ஆறுதல் சொல்ல நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வருகை தந்தார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றிருந்த ஜான்கெர்ரி அங்கிருந்து நேராக பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வந்தார். காயமடைந்த அமெரிக்கர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு பின்னர் பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல், வெளியுறவுத்துறை மந்திரி டிடியர் ரெய்ன்டர்ஸ், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் ஆகியோர்களை சந்தித்து ஆலோசனை செய்தார்.
இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு செய்ய தேவைப்பட்டால் ஒத்துழைப்பு அளிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.